பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் போட்டியிட இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது ஆதரவாளர்கள் சுயாட்சியாக நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது நடந்த தாக்குதல் விவரங்கள்
இம்ரான் கான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர்கள், மே 9-ம் தேதி பாகிஸ்தான் முழுவதும் உள்ள முக்கிய ராணுவ தளங்களை சேதப்படுத்திய வன்முறை தொடர்பாக பல வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம், இஸ்லாமாபாத்தில் துணை ராணுவ ரேஞ்சர்களால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பெரும் போராட்டம் வெடித்தது.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட 20க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் அப்போது நடந்த வன்முறையில் சேதமடைந்தன.
லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீடு, அஸ்காரி டவர், ஷாட்மான் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.