மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியா-கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவுடனான உறவு "முக்கியமானது" என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கூறியுள்ளார். "ஆழமான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்ற உறவுகளை இந்தியாவுடன் மேம்படுத்த கனடா தீவிரமாக முயல்கிறது. ஆனால், தனது நாட்டின் சட்டத்தையும் குடிமக்களையும் பாதுகாக்கும் பொறுப்பும் கனடாவுக்கு உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். குளோபல் நியூஸில் தி வெஸ்ட் பிளாக் என்ற செய்தி நிறுவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின் போது அமைச்சர் பில் பிளேயர் இதை தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த திங்கள்கிழமை கனடா குற்றம் சாட்டியது.
கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதா என்பதை விசாரித்து வரும் கனடா
ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர், "இந்தியாவுடனான கனடாவின் உறவைப் பொறுத்தமட்டில் இது ஒரு சவாலான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியது தொடர்பாக எங்களுக்கு பெரிய கவலை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.