LOADING...
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் அதிர்ச்சி; பலருக்கு காயம்
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் பலர் காயம்

லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் அதிர்ச்சி; பலருக்கு காயம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2025
10:22 am

செய்தி முன்னோட்டம்

லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேம்பிரிட்ஜ் நகரத்திலிருந்து வடமேற்கே சில மைல் தொலைவில் உள்ள ஹன்டிங்டன் சந்தைப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் விமான ஆம்புலன்ஸ் உட்பட அவசரகாலச் சேவைகள் ஹன்டிங்டன் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளன. இந்தத் தாக்குதல் ஒரு முக்கியச் சம்பவம் (Major Incident) என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் போக்குவரத்துப் போலீஸ் (BTP) தெரிவித்துள்ளது.

கைது

சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது

இந்தச் சம்பவத்தின் முழுமையான சூழ்நிலைகளையும், தாக்குதலின் நோக்கத்தையும் கண்டறியப் பயங்கரவாத தடுப்புப் போலீஸ் பிரிவினர் ஆதரவளித்து வருவதாக BTP உறுதிப்படுத்தியுள்ளது. டொன்காஸ்டரில் இருந்து இலண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் இந்தக் கத்திக்குத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஹன்டிங்டன் நிலையத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையான கேம்பிரிட்ஜ்ஷைர் கன்ஸ்டபுலரி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளப் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். கிழக்குக் கடற்கரை மெயின்லைன் சேவைகளை இயக்கும் இலண்டன் வடக்கு கிழக்கு ரயில்வே நிறுவனம், இந்தச் சம்பவத்தால் தங்கள் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.