
அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், புதிய H-1B விண்ணப்பங்கள், H-1B நிலை மாற்றங்கள், மற்றும் நிறுவன மாற்றங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
விசா செயலாக்கம்
விசா செயலாக்கத்திற்கு அடிப்படை தேவையான LCA
அமெரிக்க தொழிலாளர் துறையிடம் ஒரு நிறுவனமாவது, புதிய H-1B விசாவை ஸ்பான்சர் செய்ய வேண்டுமானால், தொழிலாளர் நிபந்தனை விண்ணப்பம் (LCA) முன்வைக்க வேண்டும். தற்போது பணிநிறுத்தம் காரணமாக DOL (Department of Labor) நிதியுதவி இல்லாத நிலையில், இந்த விண்ணப்பங்கள் செயலாக்கப்படுவதில்லை. "LCA ஒப்புதல் இல்லாமல், எந்த புதிய H-1B விண்ணப்பமும், நிலை மாற்றமும் செல்லாது. DOL செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் வரை புதிய H-1B விசாக்கள் கிடையாது," என குறிப்பிடுகிறார் மேனிஃபெஸ்ட் சட்ட நிறுவனத்தின் குடியேற்ற வழக்கறிஞர் ஹென்றி லிண்ட்பெர்.
தாக்கம்
இந்தியர்கள் மீது மிகப்பெரிய தாக்கம்
தற்போது H-1B விசா வைத்திருப்பவர்களில் 71% இந்தியர்கள் என குறிப்பிடப்படுகின்றது. அதனால், பணிநிறுத்தத்தின் நேரடி பாதிப்புக்கு இந்தியர்களே பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களாக மாறுகிறார்கள். "இந்தியர்களுக்கு மிகப்பெரிய உடனடி தாக்கம் வரப்போகிறது," என்கிறார் குடியேற்ற வழக்கறிஞர் சோஃபி அல்கார்ன். அவர் கூறுவதாவது: "புதிய விண்ணப்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே USCIS வசம் சென்ற விண்ணப்பங்கள் பாதிக்கப்படாது. ஆனால் புதியவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்." அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) பலவகை H-1B மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்களை தொடர்ந்து செயலாக்க முடியும், ஏனெனில் அவர்கள் செயற்பாட்டுக்கு விசா கட்டணங்கள் மூலம் நிதியுதவி பெறுகின்றனர். இது தற்போது உள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிறிது நிம்மதியை வழங்குகிறது.
முடக்கம்
முடக்கம் எப்போது முடியும்?
அமெரிக்க அரசு பணிநிறுத்தம் அக்டோபர் 1ஆம் தேதி (உள்ளூர் நேரம்) காலை 12:01 மணி அளவில் தொடங்கியது. இதற்கு முடிவதற்கான தேதியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆட்சி காலத்தில், டிரம்ப் காலத்திய முடக்கம் 35 நாட்கள் நீடித்து, இது அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட கால முடக்கமாக இருந்தது. டிரம்ப் சமீபத்தில் கூறியதாவது: "முடக்கம் ஒரு நல்ல விஷயம். நாம் விரும்பாத பல திட்டங்களை நீக்கலாம். இது பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியை நோக்கி இருக்கும்." இந்த பணிநிறுத்தம், அமெரிக்க தொழிலாளர் துறையின் செயல்பாடுகளை முடக்குவதன் மூலம், புதிய இந்திய H-1B மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை பெரிதும் சார்ந்திருக்கும் அமெரிக்கா, பெரும் தடுமாற்றத்தை சந்திக்கிறது.