இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?
பாலஸ்தீனிய ஆயுத குழுவானாக ஹமாஸ், ஆபரேஷன் அல்-அக்ஸா பிளட்(Operation Al-Aqsa Flood) என பெயரிடப்பட்ட ராணுவ தாக்குதலை இஸ்ரேல் மீது நேற்று தொடங்கியது. இந்த ஆபரேஷனில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவில் இருந்து வெறும் 20 நிமிடத்தில் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான 'அயன் டோம்'(Iron Dome) என்பதின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருந்த போதும் நிறைய ஹமாஸ் ஏவுகணைகள் அயன் டோமிடம் இருந்து தப்பி இஸ்ரேலுக்குள் புகுந்தது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
அயன் டோம் அமைப்பு என்றால் என்ன?
அயன் டோம் என்பது இஸ்ரேலின் தரையிலிருந்து வான் வரையிலான குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு. இதனால் ஏவுகணைகள், மோட்டார் வெடிகுண்டுகள், சிறிய தூரம் பயணிக்கும் ஆளில்லா வான்வழி வாகனங்கள்( Unmanned Aerial Vehicles) உள்ளிட்டவற்றின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியும். சுமார் 70 கிலோமீட்டர் வரை செயல்படும் இந்த அயன் டோம் மூன்று முக்கிய அமைப்புகளால் ஆனது. கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ரேடார், போர் மேலாண்மை மற்றும் ஆயுதங்கள் கட்டுப்பாடு, மற்றும் 20 தமிர்(Tamir) ஏவுகணைகளுடன் ஏவுகணை செலுத்தி ஆகிய அமைப்புகளால் ஆனது இந்த அயன் டோம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதனுடைய வெற்றி சதவீதம் 90% எனவும் கூறப்படுகிறது.
எப்படி வேலை செய்கிறது அயன் டோம்?
இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்படும் போது, அயன் டோமில் உள்ள கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ரேடார் ஏவுகணையின் பாதையை கண்டறிந்து போர் மேலாண்மை மற்றும் ஆயுதங்கள் கட்டுப்பாடு அமைப்புக்கு தெரிவிக்கும். பின்னர் போர் மேலாண்மை மற்றும் ஆயுதங்கள் கட்டுப்பாடும் அமைப்பு, வேகமான மற்றும் சிக்கலான கணக்குகளை இட்டு ஏவுகணை வரும் வேகம், பாதை, அது தாக்கக்கூடிய இடம் உள்ளிட்டவற்றை கணக்கிடும். ஏவுகணை தாக்கக்கூடிய இடம் மக்கள் தொகை மிகுதியான இடமாகவோ, முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவோ இருந்தால் இந்த அமைப்பில் உள்ள ஏவுகணை தானாகவே ஏவப்பட்டு நடுவானில் எதிரியின் ஏவுகணை அழிக்கப்படும். நிறுவப்பட்டது முதல் இன்று வரை 2,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அயன் டோம் தடுத்துள்ளது.
இந்த முறை எவ்வாறு சறுக்கியது அயன் டோம்?
ஹமாஸ் ஆயுத குழுவினர் நீண்ட காலமாகவே அயன் டோமின் பலவீனங்களை கண்டறிய முயன்று வந்தனர். அதன் விளைவாகவே நேற்று குறுகிய காலத்தில் அதிகமான ஏவுகணைகளை ஏவி, அயன் டோம் ஏவுகணைகளை தடுக்க முடியாதவாறு ஹமாஸ் வியூகம் வகுத்திருந்தது. ஹமாஸ் தன்னிடம் உள்ள ஏவுகணைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது ஹமாஸ் வசமுள்ள ஏவுகணைகளால் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை கூட தாக்க முடியும்.