தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன?
இந்தியாவில் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றாலும், பாஜக தனிப்பெரும்பான்மை அடையத்தவறி விட்டது. 300 இடங்களுக்கு மேல் பாஜக அரசு வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில், 292 இடங்களை மட்டுமே இந்த கூட்டணி வென்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே வேளையில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை ஆச்சரியமூட்டும் வகையிலும், வேடிக்கையாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்பதை பற்றி ஒரு பார்வை:
சீனாவின் குளோபல் டைம்ஸ் கூறுவது என்ன?
சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ், "உற்பத்தியில் சீனாவுடன் போட்டியிடும் மோடியின் லட்சியம் இப்போது நிறைவேறுவது கடினம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த செய்திக்கு,"குறுகிய பெரும்பான்மையை மட்டுமே பெற்ற கூட்டணியுடன் மோடி வெற்றி பெறுகிறார்" என தலைப்பிட்டுள்ளனர். "மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) அவரது கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியதால், பொருளாதாரச் சீர்திருத்தத்தை முன்னெடுப்பது பிரதமருக்கு கடினமாக இருக்கும், ஆனால் தேசியவாதம் பற்றிய சம்பவங்கள் அரங்கேறக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தியா-சீனா உறவுகள் அதிக முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லீம் கோணத்தில் வெளியிட்ட பாகிஸ்தானின் Dawn பத்திரிக்கை
பாகிஸ்தானிய செய்தி நிறுவனமான டான், 'வெறுப்பைத் தோற்கடித்தது இந்தியா; முஸ்லீம் நட்பு நாடுகளின் தயவில் மோடி விட்டுச் சென்றது' என்ற தலைப்பை வெளியிட்டது. "இந்திய வாக்காளர்கள் செவ்வாய்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வெற்றியை அளித்தனர். அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தெளிவான ஆணையை அளித்தனர். ஆனால் BJP யின் பெரும்பான்மையை இழந்தது. மோடி தனது சொந்த இரும்புக் கவச பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யப் பழகிவிட்டார்; 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், 10 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தார்" என்று முகமது அலி ஜின்னாவால் நிறுவப்பட்ட கராச்சியை தளமாகக் கொண்ட இந்த செய்தித்தாள் எழுதியது.
உதவி தேவை என குறிப்பிட்ட அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ்
'அதிகாரத்தில் நிலைத்திருக்க உதவி தேவை, மோடி தனது வெல்ல முடியாத தன்மையை இழக்கிறார்' என்பது தி நியூயார்க் டைம்ஸ் தலைப்பிட்டது. மோடி அரசாங்கதை அமைத்தாலும், தேர்தல் பிஜேபிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் மோதலாக இருந்தது என்றும், இப்போது அவர் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எப்படி நம்பியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஊடகம் எழுதியது. "மற்றும் இந்தியா, மோடியின் அதிகாரத்தை நீட்டிக்கும்போது, அவரது அரசியல் ஆற்றலுக்கு வரம்புகள் இருப்பதைக் கற்றுக்கொண்டது"என்று அது குறிப்பிட்டது.
ஏழைகள் தான் பாஜகவின் சரிவை தீர்மானித்ததாக,லண்டனை சேர்ந்த தி டைம்ஸ் கூறுகிறது
லண்டனில் இருந்து வெளிவரும் தி டைம்ஸ் நாளிதழ், "இந்தியாவின் ஏழை வாக்காளர்கள், பிரதமரின் பாரதிய ஜனதா கட்சியை முழுவதுமாக வெற்றி பெற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது." என செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஏழைகள்தான் இதைச் செய்தார்கள் என்ற கூற்றை ஆதரிக்கும் தரவு எதுவும் அந்த செய்தியில் இல்லை. அதன் தலைப்பு, 'இந்திய தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையை இழந்த பின் கூட்டணி பேச்சுவார்த்தையில் மோடி'.