புனித நகரங்கள் மீது தாக்குதலா? ஹூதி அமைப்பு கொந்தளிப்பு; ரியாத் விமான நிலையம் மீண்டும் திறப்பு
செய்தி முன்னோட்டம்
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக சவுதி அரேபிய அரசு சுமத்திய குற்றச்சாட்டை ஏமனின் ஹூதி அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சவுதி அரேபியாவின் இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் தங்கள் மீது தேவையற்ற பழியை சுமத்த சவுதி முயல்வதாகவும் ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா கடுமையாக சாடியுள்ளார். இச்சம்பவத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பெரிய அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சவுதி அரேபியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்து நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சவுதியின் நடவடிக்கை
சவுதி வான் பாதுகாப்புப் படையின் ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கை
ஹூதி தீவிரவாத அமைப்பினால் ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து தடுத்து அழித்ததாக சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தடுத்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் இடிபாடுகள் மற்றும் உடைந்த பாகங்கள் மக்கா மற்றும் மதீனா பிராந்திய பகுதிகளில் விழுந்ததில் சில கட்டிடங்கள் சேதமடைந்ததாக சவுதி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இதில் பொதுமக்கள் யாருக்கும் பெரிய அளவில் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
பாதுகாப்புப் படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தாக்குதல்
சவுதியின் 3 சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
புனித நகரங்களை தாக்கியதாகக் கூறுவது பெரிய பொய் எனக் குறிப்பிட்ட ஹூதிகள், சவுதியின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், தம்மாம் மற்றும் நஜ்ரான் ஆகிய 3 முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விமானப்படை தளங்களையும் தாக்கியதாக ஹூதிகள் அறிவித்தனர்.
இதற்காக பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் அவர்கள் தங்களின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையம் திறப்பு
மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் ரியாத் மன்னர் காலித் விமான நிலையம்
தொடர் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) முதல் மீண்டும் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தனித்தனி முனையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயணத் தரவுகளை உறுதிசெய்த பிறகே விமான நிலையத்திற்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு சோதனைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் போதிய நேரத்திற்கு முன்னதாகவே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.