நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்த இந்த ஹெலிகாப்டரை, மூத்த கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பயணிகளும் வெளிநாட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர், சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு காலை 9:45 மணிக்கு புறப்பட்டதாக, நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தகவல் அதிகாரி ஞானேந்திர பூல் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் பாதை மாற்றம்
நேபாளத்தில் பருவமழை காரணமாக, இந்த ஹெலிகாப்டரில் வழித்தடம் மாற்றப்பட்டு வேறு பாதையில் இயக்கப்பட்டுள்ள தகவலை, விமான நிலைய அதிகாரி சாகர் கேடல் தெரிவித்தார். காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கிடையே, "ஹெலிகாப்டரில் உள்ள மொத்த நபர்கள், 6 (5 பயணிகள் + 1 கேப்டன்). ஆல்டிட்யூட் ஏர் ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புக்காக புறப்பட்டது" என்று நேபாள விமான போக்குவரத்து ஆணையம் ட்வீட் செய்துள்ளது. நேபாளத்தில் அடிக்கடி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகள் நடப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடைசியாக கடந்த ஜனவரியில் நடந்த ஒரு விமான விபத்தில், 72 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.