வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்
கடந்த ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள் இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவரும், ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பருமான பிரிகோஜின், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். இவர் மரணம் அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபருக்கு எதிராக மாஸ்கோ நகர் நோக்கி கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பு குறித்து பல மேற்கத்திய நாடுகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன. ரஷ்ய அதிபரின் தற்போதைய பேச்சு பிரிகோஜின் மரணத்தில் ரஷ்ய விசாரணை குறித்து வெளிவரும் முதல் தகவலாகும்.
பிரிகோஜின் உடலில் ரத்தப் பரிசோதனை செய்யப்படவில்லை
ரஷ்யாவில் நடந்து வரும் வால்டாய் கலந்துரையாடல் மன்ற நிகழ்வில் பேசிய புதின். "விசாரணை குழுவின் தலைவர் என்னிடம் சில நாட்களுக்கு முன் அறிக்கை அளித்தார்." "விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களில் கையெறி குண்டுகளின் பாகங்கள் கிடைத்தன. விமானம் வெளிப்புறத்தில் இருந்து பாதிப்புக்குள்ளாகவில்லை" எனக் கூறியிருந்தார். இறந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படாதது குறித்த தனது அதிருப்தியை அதிபர் புதின் வெளிப்படுத்தினார். "இறந்தவர்களுக்கு மது மற்றும் போதைப் பொருட்களை கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை". "செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள வாக்னர் நிறுவனத்தில் 10 பில்லியன் ரஷ்ய ரூபல் மற்றும் 5 கிலோ கொக்கின் பறிமுதல் செய்யப்பட்டது" என புதின் நினைவு கூர்ந்தார்.