அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு
இஸ்ரேலுக்குள் அல் ஜசீரா என்ற தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அமைச்சரவை ஒருமனதாக வாக்களித்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அல் ஜசீரா சேனலின் செயல்பாடுகளை 45 நாட்களுக்கு நிறுத்தி வைக்க இந்த வாக்கெடுப்பு இஸ்ரேலுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டு ஒலிபரப்பாளர்களை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் இஸ்ரேல் நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீராவின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல்
ஹமாஸுக்கு உறுதுணையாக இருக்கும் அந்த ஊடகத்தை நமது நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் இது என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அல் ஜசீரா நிருபர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்தனர் மற்றும் நமது படையினருக்கு எதிராக தூண்டிவிட்டனர்" என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார். இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி தனது ட்விட்டர் பதிவில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்திற்கு எதிரான உத்தரவுகளில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளார். எடிட்டிங் மற்றும் ரூட்டிங் உபகரணங்கள், கேமராக்கள், மைக்ரோஃபோன்கள், சர்வர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றை உள்ளடக்கிய "அந்த சேனலின் செய்திகளை வழங்கப் பயன்படுத்தப்படும்" அல் ஜசீராவின் ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்யவும் கர்ஹி உத்தரவிட்டார்.