உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை
Aqueduct Water Risk Atlas என்ற தங்களுடைய திட்டத்தின் கீழ், உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது World Resource Institute (WRI) அமைப்பு. உலகில் 25 நாடுகளில் வாழும், கிட்டத்தட்ட பூமியின் 25% மக்கள் தொகையானது, தண்ணீர் எச்சரிக்கையை எதிர்கொண்டு வருவாதாக தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமைப்பு. உலகில் 4 பில்லியன் மக்கள் (ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதி), ஒரு வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டு இந்த அளவு 60% ஆக உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
GDP-யை பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு:
2050-ல் 71 ட்ரில்லியன் டாலர்கள் (31%) அளவு உளகளாவிய ஜிடிபி பாதிப்பை, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்தும் என WRI அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2010-ல் 15 ட்ரில்லியன் டாலர்களாக (24%)இருந்தது குறிப்பிடத்தக்கது. 2050-ல், இந்தியா, மெக்ஸிகோ, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளே தண்ணீர் தட்டுப்பாட்டினால், அதிகளவிலான ஜிடிபி பாதிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பஹ்ரைன், சைப்ரஸ், குவைத். லெபனான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள், அதிகளவிலான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் நாடுகளாக இருப்பதாகவும் WRI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பூமியின் மிகவும் முக்கியமான வளம் தண்ணீர். ஆனால், அவற்றை நாம் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்ளவில்லை", எனத் தெரிவித்திருக்கிறார், இந்தத் தகவலறிக்கையின் ஆசிரியர் சமந்தா குஸ்மா.