ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கைக்கு பரவலான சேதம் ஏற்பட்டது. இந்த வரலாறு காணாத மழையால் ஓமனில் குறைந்தது 20 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்த உலக வானிலை அட்ட்ரிபியூஷன் குழு, புவி வெப்பமடைதல் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் இந்த வரலாறு காணாத மழை பெய்ததாக தெரிவித்துள்ளது. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் எல் நினோ ஆண்டுகளில் இப்பகுதியில் 10-40% வரை மழைப்பொழி அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு கிளவுட்-சீடிங் தொழில்நுட்பம் தான் காரணம் என்ற வதந்திகள் மறுக்கப்பட்டன
துபாயில் வரலாறு காணாத 14 செ.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இது ஒன்றரை வருட சராசரி மழைக்கு சமமாகும். 1949 இல் பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மழை இதுவாகும். அதிக மழை பெய்ததாலும், போதிய இயற்கை வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் துபாய் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக விதைப்பு தொழில்நுட்பம் காரணமாக இப்படி ஒரு வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதலில் வதந்திகள்கிளம்பின, ஆனால், ஆய்வு மூலம் இந்த வதந்திகள் மறுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையமும் அதிக மழை பெய்யும் நாளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்று மறுத்துள்ளது.