G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்
இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார். போர்கோ எக்னாசியாவின் சொகுசு விடுதியில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் 12 நாடுகளும் ஐந்து சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டன. ஒரு வருடத்திற்கு முன், புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கடுமையான கவலைகளை மோடி தெரிவித்தார். அதன்பிறகு, கனடா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சிதைந்தன. இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்தனர்.
AI, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து பேசிய பிரதமர் மோடி
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் மற்றும் பலரையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவும் ஜப்பானும் "பாதுகாப்பு, தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், தூய்மையான ஆற்றல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற உள்ளது" என்று கூறினார். ஜி7 அவுட்ரீச் அமர்வின் போது, "கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்." ஆகியவை எரிசக்திக்கான இந்தியாவின் நான்கு முக்கிய கொள்கைகள் என்று பிரதமர் மோடி கூறினார். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
போப் பிரான்சிஸ் மற்றும் G7 தலைவர்களின் கவலைகள்
மேலும், உலகலாவிய தெற்கின் பிரச்சனைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, குறிப்பாக ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலக தலைவர்களுக்கு எடுத்துரைத்தார். காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், 2070 ஆம் ஆண்டிற்குள் "நிகர பூஜ்ஜியத்தை" எட்டுவதற்கு இந்தியா கடுமையாக முயற்சி வருகிறது என்றும், இந்தியா அதன் அனைத்து COP கடமைகளையும் முன்பே நிறைவேற்றிவிட்டது என்றும் கூறினார். செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவாதிப்பதற்காக போப் பிரான்சிஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். AI காரணமாக முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய அநீதிகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.