போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், இரட்டை என்ஜின் மேம்பட்ட போர் விமானம் (AMCA) மற்றும் இந்திய விமானம் தாங்கி கப்பல்களுக்கான இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர் விமானம்(TEDBF) ஆகியவற்றை இயக்கும் இன்ஜிங்களை உற்பத்தி செய்ய இந்தியாவுடன் இணைந்திருக்கிறது ஐரோப்பிய நாடான பிரான்ஸ். இந்த இன்ஜின்களை இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரானுக்கு அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அனுமதி வழங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருக்கும் இந்தியா, அதன் இராணுவ தேவைகளுக்கு ரஷ்யாவையே நம்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது, பிரான்ஸ் இந்தியாவிற்கு 100% தொழில்நுட்ப பரிமாற்றத்தை வழங்க அனுமதி அளித்துள்ளது.
இது இந்திய-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்
அதனால், உள்நாட்டில் என்ஜின்களை தயாரிப்பதற்கான "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும், இது இந்திய-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி(ADA) உருவாக்கி வரும் AMCA மற்றும் TEDBFக்கு தேவையான அதிக உந்துதல் இயந்திரங்களை இந்தியாவால் தயாரிக்க முடியும். ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி(ADA) என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு(DRDO) கீழ் இயங்கி வருகிறது என்பது குறிபிடத்தக்கது. மேலும், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரான் ஆகிய இரு நிறுவனங்களும் இந்திய மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களுக்கான எஞ்சினை கூட்டாக உருவாக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.