நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல்
ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது. அந்த நான்கு அதிகாரிகளும் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இந்த பிரச்சனை இரு நாட்டு பிரச்சனையாக உருவாகவில்லை என்று ஆஸ்திரேலிய தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அதிகாரிகளின் வெளியேற்றத்தை அடுத்து, இந்தியாவை பிற நாடுகள் "ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக வைத்துள்ளது." என்று ஏபிசி கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வெளிநாடுகளின் நெறிமுறைகளை மீறுவதில் பெயர் பெற்ற நாடுகளாகும்.
அவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை கண்காணித்ததாக குற்றச்சாட்டு
"அந்த நான்கு அதிகாரிகளும் முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல்வாதிகள், மாநில போலீஸ் சேவை ஆகியவற்றை குறிவைத்து செயல்பட்டு வந்தனர். முக்கியமாக, அவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்" என்று ஏபிசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு சம்பவத்தை குறித்து பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின்(ஏஎஸ்ஐஓ) தலைவரான மைக் புர்கெஸ், வெற்றிகரமாக ஒரு உளவாளி கூட்டத்தை ஒழித்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "ஆஸ்திரேலியாவில் இயங்கி வந்த ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு உளவுத்துறையைச் சேர்ந்த உளவாளிகளின் கூட்டை கலைத்தோம். நாங்கள் அந்த வெளிநாட்டு உளவாளிகளை எதிர்கொண்டு, அமைதியாகவும் தொழில் ரீதியாகவும் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களை அகற்றினோம்," என்று ASIO தலைவர் கூறி இருந்தார்.