2024 அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து வெளியேறினார் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ்
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான போட்டியிலிருந்து, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியேறினார். லாஸ் வேகாஸில் குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற 'யூத கூட்டணி மாநாட்டில்' தனது முடிவை பென்ஸ் வெளியிட்டார். "இது கடினமான போட்டி என எனக்கு எப்போதும் தெரியும், இருந்தபோதும் வருத்தமில்லை" என அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. குடியரசு கட்சியினர் இடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து பின்னிலை வசித்து வந்த மைக் பென்ஸ், தனது பிரச்சாரங்களுக்காக செலவு செய்ததில் கடனிலும் சிக்கிக்கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் வேட்பாளரான பைடனின் வெற்றியை அங்கீகரித்ததற்காக, பெருபான்மையான குடியரசு கட்சியினரின் செல்வாக்கை பென்ஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.