Loading...
வளைகுடா வேலை வேண்டாம்! இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் இணைக்கக்கோரி நேபாளத்தில் கோர்கா வீரர்கள் போராட்டம்
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் தேர்வில் தங்களையும் சேர்க்கக்கோரி நேபாள கோர்கா பிரிவினர் போராட்டம்

வளைகுடா வேலை வேண்டாம்! இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் இணைக்கக்கோரி நேபாளத்தில் கோர்கா வீரர்கள் போராட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் நேபாள இளைஞர்களை சேர்ப்பதை மீண்டும் தொடங்கக் கோரி, நேபாளத்தின் போக்ரா நகரில் முன்னாள் கோர்கா வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் நேபாளத்திற்கு செல்லவுள்ள நிலையில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தியப் படைகளில் பணியாற்றிய முன்னாள் கோர்கா பிரிகேட் சங்கம் சார்பில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நேபாள மத்திய அரசுக்கு 2 அம்சக் கோரிக்கை மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது. நேபாள செய்தி இணையதளமான ரடோபதி வெளியிட்ட செய்தியின்படி, அதில் நிறுத்தப்பட்டுள்ள சேர்க்கை முறையை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம்

வளைகுடா நாடுகளை விட இந்திய ராணுவ வேலைவாய்ப்புதான் முக்கியம்

50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வளைகுடா நாடுகளுக்கு சென்று குறைந்த ஊதியத்தில் கஷ்டப்படுவதை விட, இந்திய ராணுவத்தில் அக்னிவீரராக சேருவது நூறு மடங்கு சிறந்தது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 ஆண்டு காலத்தில் கணிசமான ஊதியமும் இதர வசதிகளும் கிடைப்பதாக கோர்கா அமைப்பின் தலைவர் கலோனல் கிருஷ்ண பகதூர் கத்ரி தெரிவித்துள்ளார்.

சுகௌலி ஒப்பந்தத்திற்குப் பிறகு கடந்த 207 ஆண்டுகளுக்கும் மேலாக நேபாள இளைஞர்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

ஆனால் 2022இல் கொண்டுவரப்பட்ட அக்னிபத் திட்டத்திற்குப் பின், நேபாள அரசு அனுமதி வழங்காததால் சேர்க்கை தடைபட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேபாள அரசு

நேபாள அரசின் தடையும் வரலாற்றுப் பின்னணியும்

2022இல் இந்தியா அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்தின்கீழ் 4 ஆண்டுகள் மட்டுமே சேவைகாலம் என்பதால், வீரர்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து நேபாள அரசு சேர்க்கையை நிறுத்தி வைத்தது.

1947 ஆம் ஆண்டின் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய மற்றும் பிரிட்டிஷ் படைகளில் கோர்கா வீரர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

இந்தியப் பாதுகாப்புப் படை தளபதி முன்னாள் ஜெனரல் அனில் சவுகான், நேபாள அரசுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்திய குடிமக்களுக்கு ஒரு விதியும் நேபாளிகளுக்கு வேறு விதியும் இருக்க முடியாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

ADVERTISEMENT

ராணுவத் தளபதி

இந்திய ராணுவத் தளபதியின் நேபாள விஜயம்

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகஸ்ட் 16 முதல் 5 நாட்கள் நேபாளப் பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில், நேபாள அதிபர் ராம்சந்திர பௌடேல் அவருக்கு நேபாள ராணுவ ஜெனரல் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கவுள்ளார்.

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான பரஸ்பர பாரம்பரியத்தின்படி இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, அக்னிவீர் தேர்வு குறித்த கோரிக்கைகளை நேபாள அரசு ஏற்காவிட்டால், தொடர்ந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகக் கோர்கா அமைப்பினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT