இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக எகிப்து ரஃபா கிராசிங் எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏராளமான வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் புதன்கிழமை போரினால் பாதிக்கப்பட்ட காசாவை விட்டு வெளியேறத் தொடங்கினர். காசாவின் தெற்கு பகுதியில் உள்ள எகிப்து எல்லையான ரஃபா வழியாக எத்தனை பேர் இதுவரை வெளியேறினர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் நேரடி காட்சிகளில் பாலஸ்தீனிய பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேறுவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்னதாக, காசா பகுதியில் வசிப்பவர்களுக்கான நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் ரஃபா எல்லை வழியாக ட்ரக்குகள் மூலம் அனுப்பப்பட்டன.
சுமார் 400 வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து வெளியேறக்கூடும்
ஆனால், காசா பகுதியிலிருந்து மக்கள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், போர் ஆரம்பித்த பிறகு முதல்முறையாக காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது. எனவே, சுமார் 400 வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் மக்கள் புதன்கிழமை எகிப்து எல்லையை கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 44 நாடுகளைச் சேர்ந்த மக்களும், ஐ.நா. அமைப்புகள் உட்பட 28 ஏஜென்சிகளை சேர்ந்தவர்கள் காசாவில் வசித்து வந்தனர். மேலும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் காசா பகுதியில் 2.4 மில்லியன் பாலஸ்தீன மக்களும் வசித்து வருகின்றனர். போர் ஆரம்பித்ததில் இருந்து 8500 பாலஸ்தீனர்களும், 1400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதிக்கான உணவு, மருத்துவம், மின்சாரம், இணையம் போன்ற வசதிகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால், மேலும் உயிரிழப்புகள் பதிவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.