
டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.
வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அபராதங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவதாக மெட்டா நேற்று அறிவித்தது.
வாஷிங்டன் டி.சி.யில், ஜனவரி 6, 2021 அன்று ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, 2021 ஆம் ஆண்டில் டிரம்பின் சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக மெட்டா நிறுவனம் முதன்முதலில் நடவடிக்கை எடுத்தது.
அந்த நேரத்தில், கிளர்ச்சியாளர்களை பற்றி முன்னாள் அதிபர் டிரம்ப் புகழ்ந்தது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் வன்முறையை தூண்டுவது போல் இருததால் மெட்டா நிறுவனம் டிரம்பின் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தியது.
அமெரிக்கா
இனி நீண்ட இடைநீக்கங்கள் இருக்காது
ஜனவரி 2023இல், டிரம்ப்பின் கணக்கை மீண்டும் செயல்பட மெட்டா அனுமதித்தது. அதற்கு அடுத்த மாதத்தில் அவர் தனது கணக்குகளுக்கான அணுகலை மீண்டும் பெற்றார்.
எனினும், டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அப்போதும் நீக்கப்படவில்லை.
அதனால், அவரது சமூக ஊடக கணக்குகள் நீண்ட இடைநீக்கங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில், தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.
மெட்டாவின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, இனி மெட்டா நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதல்களை ட்ரம்ப் மீறினால், நீண்ட இடைநீக்கத்திற்கு மாறாக, சில நாட்களுக்கு மட்டுமே அவரது கணக்கு இடைநீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது