ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் உள்ள பல நகரங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உக்ரைன் மீது தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்திருந்தது. அது நடந்து 24 மணி நேரமே ஆகி இருக்கும் நிலையில் மீண்டும் உக்ரைன் நகரங்களில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.
வான் வழி பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன: இராணுவ நிர்வாகம்
"கிய்வ் பிராந்தியத்தில் வான் வழி பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன" என்று பிராந்திய இராணுவ நிர்வாகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. குறைந்தது ஒரு பெரிய குண்டுவெடிப்பு கிய்வ் நகரத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரேனிய பொது ஒளிபரப்பு நிறுவனமான சஸ்பில்னே தெற்கு நகரமான ஜாபோரிஜியாவில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது. ஜபோரிஜியா பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவரான யூரி மலாஷ்கோ டெலிகிராமில் விமான எதிர்ப்பு பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.