Loading...
உக்ரைன் ஆயுதப் பேர ஊழல்: எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா, பின்னணியில் இந்திய நிறுவனம்
எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா

உக்ரைன் ஆயுதப் பேர ஊழல்: எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா, பின்னணியில் இந்திய நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
07:49 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட 70 மில்லியன் யூரோ (சுமார் ₹768.50 கோடி) மதிப்பிலான பீரங்கி தோட்டாக்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எழுந்த கடுமையான அரசியல் விமர்சனங்களால் எஸ்டோனியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். எஸ்டோனியாவின் தேசிய தணிக்கை அலுவலகம் பாதுகாப்புத் துறையின் நிதி நிர்வாகம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு தீவிர குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

முறைகேடு

கொள்முதல் முறைகேடும் குற்றச்சாட்டுகளும்

2024-ஆம் ஆண்டில் எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம் (RKIK), இத்தாலியில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவின் 'Neco Defence Munitions' நிறுவனத்திற்கு சொந்தமான 'Datasel SRL' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

பீரங்கித் தோட்டாக்கள் தயாரிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாத இந்நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி நிதி அமைப்பின் கீழ் சுமார் 70 மில்லியன் யூரோக்கள் முன்பணமாக வழங்கப்பட்டன.

சட்ட நடவடிக்கை

நிறுவனத்தின் விளக்கம் மற்றும் சட்ட நடவடிக்கை

ஒப்பந்தப்படி உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டிய வெடிமருந்துகள் பலமுறை தாமதமானதாகவும், 2025-இல் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாகவும் எஸ்டோனியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை டேட்டாசெல் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

58 மில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களைத் தடையின்றி வழங்கிய பின்னரும் எஸ்டோனியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக ரத்து செய்துவிட்டதாகக் கூறி, பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ராஜினாமா

அரசியல் பொறுப்பேற்று அமைச்சர் விலகல்

தனிப்பட்ட முறையில் ஒப்பந்தங்களில் தனக்கு நேரடி பங்கில்லை என்றாலும், அமைச்சுப் பொறுப்பின் அடிப்படையில் அரசியல் ரீதியான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஹன்னோ பெவ்கூர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கான ஆதரவும் நாட்டின் பாதுகாப்பும் தொடர்ந்து பலமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஐரோப்பிய ஆணையமும் மற்றும் எஸ்டோனிய வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT