அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
2023ம் ஆண்டுக்கான டாப் 400 அமெரிக்க பணக்காரர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.
கடந்த 2022ம் ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்கே இந்த ஆண்டும் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.
கடந்தாண்டு 251 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்திருந்த எலான் மஸ்க், இந்த ஆண்டும் அதே அளவு சொத்து மதிப்பையே கொண்டிருக்கிறார். ஆனால், கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ட்விட்டர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா
அடுத்தடுத்த இடங்களில் யார்?
கடந்தாண்டு 151 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸ், இந்தாண்டு 161 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்புடன் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.
கடந்தாண்டு நான்காமிடத்தில் இருந்த ஓராக்கிள் நிறுவனத்தின் துணை-நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான லேரி எல்லிசன், இந்தாண்டு 158 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் டாப் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறார்.
உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களாலும் கொண்டாடப்படும் பங்குச்சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபட் கடந்தாண்டு ஐந்தாமிடம் பிடித்திருந்த நிலையில், 2023ம் ஆண்டிற்கான பட்டியலில் 121 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான்காமிடம் பிடித்திருக்கிறார்.
உலகம்
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர்களின் சொத்து மதிப்பு:
கூகுள் நிறுவனரான லேரி பேஜ் கடந்தாண்டுப் பட்டியலில் ஆறாம் இடம் பிடித்திருந்தார். இந்தாண்டு கூகுளின் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் அறிமுகத்தால், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் பங்கு மதிப்புகள் உயர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, ஆல்ஃபபெட்டின் பங்குகளை கொண்டிருக்கும் லேரி பேஜின் சொத்து மதிப்பும் உயர்ந்து 114 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்தாண்டிற்கான பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்திருக்கிறார்.
முன்னாள் முன்னணி உலக பணக்காரரான பில் கேட்ஸ், 111 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஆறாம் இடத்தையும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் 106 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்புடன் எட்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர். கூகுளின் துணை நிறுவனரான செர்கே பிரின் இந்தப் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.