இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான நிகில் காமத்தின் 'People by WTF' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், எச்1பி விசா திட்டத்தின் தவறான பயன்பாடு காரணமாகவே டிரம்ப் நிர்வாகத்தின் சில குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் தூண்டப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், இந்தக் குடியேற்றத் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
திறமையானவர்கள்
திறமையானவர்களுக்குத் தேவை
எச்1பி விசா காரணமாக அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோகிறது என்ற சிலரது கருத்து குறித்தும் மஸ்க் பேசினார். ஆனால், உலகிலேயே மிகவும் திறமையானவர்களை ஈர்ப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "திறமையானவர்களுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது என்பதே என் நேரடிப் பார்வையாகும். இந்தக் கடினமான பணிகளைச் செய்து முடிக்கப் போதுமான திறமையான நபர்களைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குச் சிரமம் உள்ளது. எனவே, அதிகத் திறமைசாலிகள் வருவது நல்லது." என்று அவர் கூறினார். இதற்கிடையே, தன்னுடைய மனைவி பாதி இந்தியர் என்றும், தன்னுடைய மகன்களில் ஒருவருக்கு, நோபர் பரிசு வென்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்பதை பெயரின் ஒரு பகுதியாக வைத்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.