மக்களை கொல்ல ஸ்டார்லிங்க் பயன்பாட்டிற்கு அனுமதியில்லை; உக்ரைன் சேவையைக் கட்டுப்படுத்தியது குறித்து எலான் மஸ்க் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
உக்ரைனில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளில் தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்ததை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரைனின் இணைய அணுகல் மீண்டும் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். வணிகப் பயன்பாட்டிற்கான ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய படையினரைக் கொல்ல உக்ரைன் முயன்றதே இந்த கட்டுப்பாட்டிற்கு முதன்மை காரணம் என மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டார்ஷீல்டு
ஸ்டார்லிங்க் விதிகள் மீறல் மற்றும் அமெரிக்க அரசின் ஸ்டார்ஷீல்டு
பொதுமக்களுக்கான வணிக சேவை அமைப்பான ஸ்டார்லிங்கை, தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் மூலம் மனிதர்களை கொல்லப் பயன்படுத்துவது தங்களின் சேவை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விதிகளில் இருந்த குளறுபடிகள் அனைத்தும் கடந்த வாரம் முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ பயன்பாட்டிற்கான ஸ்டார்ஷீல்டு என்ற தனி அமைப்பு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், அதில் முடிவெடுப்பது அமெரிக்க நிர்வாகத்தின் விருப்பம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
உக்ரைன் வீழ்ச்சி
ஸ்டார்லிங்க் துண்டிக்கப்பட்டால் உக்ரைன் படைபலம் உடனடியாக வீழ்ச்சியடையும்
போரின் தொடக்க காலத்தில் ரஷ்யாவின் தகவல் தொடர்பு இடையூறுகளை முறியடித்து உக்ரைனின் பாதுகாப்பிற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் முடக்கவோ அல்லது அழிக்கவோ முடியாத ஒரே இணைய சேவையாக ஸ்டார்லிங்க் மட்டுமே திகழ்கிறது.
ஒருவேளை ஸ்டார்லிங்க் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டால் உக்ரைனின் முன்வரிசை போர்க்களம் உடனடியாக வீழ்ச்சியடையும் என்றும், இதுவெறும் எச்சரிக்கை அல்ல மாறாக நிதர்சனமான உண்மை என்றும் அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
டிரம்ப் தலையீடு
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீடு மற்றும் சேவை சீரமைப்பு
ஸ்டார்லிங்க் வேகம் குறைக்கப்பட்டதால் உக்ரைன் ராணுவத்தின் போர்ப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.
இந்த சிக்கல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்பொழுது உக்ரைனில் ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்டு சேவைகள் மீண்டும் தடையின்றி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக உக்ரைன் அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.