ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை! முறிந்த பேச்சுவார்த்தை.. போர் தீவிரமாகுமா?
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், "இனி என்னிடம் நல்லப்பிள்ளைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது" என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதுப்பித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் திடீரென ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறிவிட்டதாக டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரானை நேரடியாக சாடியுள்ள டிரம்ப்,"ஈரானால் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது" எனத் தெரிவித்துள்ளார். இதுவே ஈரானுக்கான இறுதி எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்பதையும் மறைமுகமாக டிரம்ப் உணர்த்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை முடக்கமும், பொருளாதாரப் போரும்
அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த மறுத்ததை தொடர்ந்து, ஈரான் உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கியுள்ளது. இதற்கு பதிலடியாகவே டிரம்ப் தனது "மிஸ்டர் நைஸ் கை" எச்சரிக்கையை முதலில் விடுத்திருந்தார். நியாயமான மற்றும் அறிவுப்பூர்வமான ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படவில்லை என்றால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்படும் என அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
சர்வதேச கப்பல்கள் மீதான தாக்குதல் மற்றும் பேச்சுவார்த்தை முறிவு
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதற்குச் சற்று முன்பாக, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டு சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என டிரம்ப் கருதுகிறார். சர்வதேச கடல் எல்லைகளில் நிலவும் இந்தப் பதற்றம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக ஒன்றிணையத் தூண்டியுள்ளது.