
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து இந்திய இறக்குமதிகளுக்கும் கூடுதலாக 25% வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளார், இதனால் மொத்த வர்த்தக வரி 50% ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார். இந்த வர்த்தகம் ரஷ்யாவின் தற்போதைய ராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. மேலும், தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக டிரம்ப் சமீபத்திய அறிக்கையில் குற்றம் சாட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை சிறுமைப்படுத்தும் என்றும், இந்தியா அதன் எரிசக்தி வர்த்தக நடைமுறைகளை மாற்றாவிட்டால் மேலும் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
எதிர்ப்பு
இந்தியா நடவடிக்கைக்கு எதிர்ப்பு
இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தது, இது நியாயமற்றது மற்றும் சீரற்றது என்று கூறியது. குறிப்பாக மற்ற உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்தியாவை நிறுத்தச் சொல்வது இரட்டை வேடம் எனக் கூறியது. நாட்டின் இறக்குமதிகள் அதன் பொருளாதார நலன்களுக்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும் சேவை செய்வதாகவும், எந்தவொரு சர்வதேச விதிகளையும் மீறுவதில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். எப்படி இருப்பினும் புதிய வரி விதிப்பு, ஜவுளி, மருந்துகள், வாகன பாகங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கிய துறைகள் உட்பட சுமார் 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.