மீண்டும் போட்டியிடப் போகிறாரா டிரம்ப்? டிரம்ப் 2028 புகைப்படத்தால் அமெரிக்க அரசியலில் எழுந்த புதிய சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், டிரம்ப் 2028 எனக் குறிப்பிடப்பட்ட தொப்பியை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். "நாங்கள் வெற்றி பெறப் போகிறோம்" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவு, அவர் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறாரோ என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பு சட்டப்படி ஒரு நபருக்கு இருமுறை மட்டுமே அதிபராகும் உரிமை உள்ளது என்பதை டிரம்ப் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க சட்டம்
அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் கூறுவது என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தின்படி, ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்ட விதியின்படி, தொடர்ந்து அல்லது தனித்தனியாக இருமுறை மட்டுமே ஒருவர் அதிபர் பதவியை வகிக்க முடியும்.
டிரம்ப் ஏற்கனவே 2016 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இருமுறை அதிபராகப் பொறுப்பேற்றுள்ளதால், நடப்பு சட்டத்தின்படி 2028 தேர்தலில் அவர் போட்டியிடத் சட்டப்பூர்வமாகத் தடை உள்ளது.
விளக்கம்
2028 தேர்தல் பற்றிய விவாதங்களுக்கு டிரம்பின் முந்தைய விளக்கம்
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், 2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தாம் விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டம் இதில் மிகவும் வலுவாக உள்ளதால் தன்னால் போட்டியிட முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
ஃப்ரங்க்ளின் டி ரூஸ்வெல்ட் 4 முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே இந்த 2வது முறை வரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
சட்டத் தடைகள் இருந்தபோதிலும் டிரம்பின் ஆதரவாளர்கள் இத்தகைய பதிவுகள் மூலம் 2028 தேர்தலை மையப்படுத்தி விவாதங்களை நடத்தி வருகின்றனர்.