'முதலில் சுடுவோம், பிறகு பேசுவோம்!' கிரீன்லாந்தை நெருங்கினால் டொனால்ட் டிரம்பிற்கு விபரீதம்; டென்மார்க் ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகப் கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. யாராவது டென்மார்க் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால், தளபதிகளின் உத்தரவிற்காகக் காத்திருக்காமல் வீரர்கள் உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய சட்டம்
பழைய சட்டத்தை கையில் எடுத்த டென்மார்க்
1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பனிப்போர் காலத்து வழிகாட்டுதலின்படி, அந்நிய நாட்டுப் படைகள் டென்மார்க் எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தால், வீரர்கள் "முதலில் சுட வேண்டும், பிறகுதான் கேள்விகளை எழுப்ப வேண்டும்" என்ற ஆணை இன்னும் நடைமுறையில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஜெர்மனி டென்மார்க்கைத் தாக்கியபோது ஏற்பட்ட தகவல் தொடர்புச் சிக்கல்களைத் தவிர்க்க இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது டிரம்பின் மிரட்டலைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தை டென்மார்க் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
பிடிவாதம்
டிரம்பின் பிடிவாதமும் நேட்டோ ஆபத்தும்
ரஷ்யா மற்றும் சீனாவின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என்று டிரம்ப் கருதுகிறார். குத்தகைக்கு எடுப்பதை விட, அந்த நிலத்தின் முழு உரிமையைப் பெறுவதே சிறந்தது என்று நியூயார்க் டைம்ஸ் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், "அமெரிக்கா ஒரு நேட்டோ நட்பு நாட்டின் மீது ராணுவ ரீதியாகத் தாக்குதல் நடத்தினால், அந்த நிமிடமே நேட்டோ அமைப்பு முடிவுக்கு வரும்" என்று எச்சரித்துள்ளார்.
தூதரகம்
தூதரக ரீதியான முயற்சிகள்
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் தூதர்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகளைச் சந்தித்து, டிரம்பின் இந்த ஆக்கிரமிப்பு எண்ணத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், "ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்க அதிபரைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அந்த நிலப்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால், அமெரிக்கா ஏதேனும் செய்ய வேண்டியிருக்கும்" என்று கூறி அழுத்தத்தை அதிகரித்துள்ளார்.
விற்பனைக்கு அல்ல
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல
கிரீன்லாந்து என்பது விற்பனைக்கான பொருள் அல்ல என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன. 1951 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அமெரிக்காவிற்கு அங்கு ராணுவத் தளங்களை அமைக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் முழுத் தீவையும் கைப்பற்ற நினைப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 56,000 மக்கள் வசிக்கும் இந்த ஆர்க்டிக் பகுதி தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய ராஜதந்திரச் சிக்கலாக மாறியுள்ளது.