LOADING...
ஆபரேஷன் ஹெரோஃப் 2.0: BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்
BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்

ஆபரேஷன் ஹெரோஃப் 2.0: BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் விடுதலை இராணுவம் (BLA) 'ஆபரேஷன் ஹெரோஃப் 2.0' என்ற பெயரில் கடந்த 35 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. குவெட்டா, நுஷ்கி, குவாடர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி அளித்துள்ள தகவலின்படி, ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை 145 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதல்களில் 17 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், அப்பாவி பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

BLA

பலூச் பிரிவினைவாதிகள் அறிக்கை

BLA செய்தித் தொடர்பாளர் ஜியந்த் பலுச் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், நுஷ்கி மாவட்டத் துணை ஆட்சியர் உட்பட இரு அதிகாரிகளை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் விடுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவெட்டாவில் உள்ள காவல் நிலையங்கள், வங்கிகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஹசார் கஞ்சி பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தைப் போராளிகள் தாக்கி அழித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முதன்முறையாக இந்தத் தாக்குதல்களில் பெண் தற்கொலை படை போராளிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

எதற்காக இந்த போராட்டம்?

பலுசிஸ்தானின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும், தங்களுக்குத் தன்னாட்சி வேண்டுமென்றும் கோரி பலுச் போராளிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். 'ஆபரேஷன் ஹெரோஃப்' என்பது அதன் ஒரு கட்டமாகும். இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறை இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளதுடன், பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன, மேலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement