சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா
சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட லீக் காரணமாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. கோவிட்-19 வைரஸின் தோற்றம் சீனாவில் தற்செயலாக ஏற்பட்ட ஆய்வகக் கசிவிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்று அமெரிக்க எரிசக்தி துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன், சரியான காரணத்தை வெளியிடாமல் இருந்த இந்த எரிசக்தி துறை, அமெரிக்காவின் FBIயின் அனுமானத்தை ஒத்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகங்கள்
கொரோனாவின் தோற்றம் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் தொடர்ந்து நடந்துவந்தது. ஆனால், இதை மேற்கொண்டு ஆராய சீனா முன்வரவில்லை. அதனால், அமெரிக்கா, உளவு பிரிவுகளையும் புலனாய்வு அமைப்புகளையும் கொண்டு இதை விசாரித்து வந்ததாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், கொரோனா சீன ஆய்வகங்களில் இருந்து தான் பரவி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக எரிசக்தி துறை கூறியுள்ளது. சீனாவில் முதன்முதலில் கொரோனா பரவிய வூஹான் நகரில் பல ஆய்வகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு கட்டப்பட்டுள்ள ஆய்வகங்கள் 2002இல் பரவிய SARS தொற்றை சமாளிக்க கட்டப்பட்டதாகும். அவற்றில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் ஆகியவையும் அடங்கும்.