இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வியூகத் தாளின் (US National Security Strategy Paper) நீண்டப் பதிப்பில் இந்தக் குழுவின் கருத்து முன்மொழியப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முழு விவரம் இங்கே:-
கோர் 5
கோர் 5 என்றால் என்ன?
இந்தப் புதியக் குழுவில் அமெரிக்காவுடன், இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கோர் 5 குழு, சக்தி வாய்ந்த ஜி7 குழுவுக்குப் போட்டியாகவோ அல்லது மாற்று ஏற்பாடாகவோ அமையும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் பாரம்பரிய ஐரோப்பியக் கூட்டாளிகளை விடுத்து, உலகத்தின் பெரும் சக்திகள் மற்றும் வளர்ந்து வரும் வல்லரசுகளை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு புதியப் புவிசார் அரசியல் மனநிலையை இதுப் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் நீண்டகாலப் போட்டியாளர்களானச் சீனாவையும் ரஷ்யாவையும், அமெரிக்காவுடன் ஒரே குழுவில் சேர்ப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும், இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சித் தர்க்கம் தெளிவாக இல்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியா
இந்தியாவின் சேர்க்கை மற்றும் அதன் முக்கியத்துவம்
கோர் 5 பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம்பெற்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ள இந்தியாவை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா இதில் இணைக்க விரும்புகிறது என்று ஊகிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் மிகப் பெரிய சந்தை மற்றும் தற்போதைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா சாதகமான சலுகைகளை வழங்கியிருக்கலாம் என்பதால், அமெரிக்காவின் நலனுக்காகவும் இந்தியா இதில் சேர்க்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
தற்போதைய நிலை
குழுவின் தற்போதைய நிலை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்தக் குழுவை உருவாக்கும் யோசனை இருப்பதை மறுத்துள்ளது. இருப்பினும், ஆரம்ப வரைவு ஆவணங்களில் இதுப் பற்றியக் கருத்து இருந்ததால், ஊடகங்களின் ஊகங்கள் தொடர்கின்றன. இது தற்போது ஊடகச் செய்திகள் மற்றும் வரைவு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஊகத்தின் நிலையிலேயே உள்ளது. இந்தக் கருத்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றால், உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் மூலோபாயக் கூட்டணிகளின் எதிர்காலத்தை இது மாற்றியமைக்கலாம்.