COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு
28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP28) காலநிலை உச்சிமாநாட்டில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியாவும் சீனாவும் மறுத்துவிட்டன. உறுதிமொழியில் தூய்மையான சக்தியை அதிகரிப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை அடங்கும். தடையற்ற நிலக்கரி மின்சாரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் மற்றும் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிதியுதவியை நிறுத்தவும் இந்த உறுதிமொழி அழைப்பு விடுக்கிறது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில் இருந்தபோது ஆதரவளித்திருந்த நிலையில், தற்போது உறுதிமொழியில் கையெழுத்திட மறுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
COP 28 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
முன்னதாக, வெள்ளிக்கிழமை (டிச.1) பிரதமர் நரேந்திர மோடி 2028 இல் இந்தியாவில் ஐநா காலநிலை மாநாட்டை நடத்த முன்மொழிந்தார். மேலும், அவர் மக்கள் பங்கேற்பின் மூலம் கார்பன் சிங்க்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பசுமை கடன் முன்முயற்சியையும் தொடங்கினார். துபாயில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டின் (COP 28) இரண்டாம் நாளில் பல உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர், பணக்கார நாடுகள் 2050ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் அளவை முற்றிலுமாக குறைத்து, வளரும் நாடுகளுக்கு கார்பன் பட்ஜெட்டில் உலக அளவில் நியாயமான பங்கை வழங்க வேண்டும் என்றார். மேலும், உலக மக்கள்தொகையில் இந்தியா 17% மக்கள்தொகையை கொண்டிருந்தாலும், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் நாடு 4% க்கும் குறைவான பங்களிப்பை வழங்குவதாக அவர் கூறினார்.