9/11 தாக்குதலுக்கு முன்பே இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒசாமா பின்லேடன்: சிஐஏ தகவல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25வது ஆண்டை முன்னிட்டு, அந்நாட்டின் மத்திய உளவு அமைப்பான சிஐஏ ரகசிய உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகளில், அல் கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, எகிப்து, குவைத், சவுதி அரேபியா, ஏமன், உகாண்டா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மீதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9/11 சம்பவத்திற்கு முன்பே இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தாக்கும் எண்ணம் அவனுக்கு இருந்ததை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தீவிரவாத நெட்வொர்க்
அமெரிக்காவிற்குள் இருந்த அல் கொய்தா நெட்வொர்க்
9/11 தாக்குதலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே, அல் கொய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் வசித்து வந்த செய்தி வெள்ளை மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1998 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத அறிக்கைகளின்படி, அமெரிக்கக் குடிமகன் ஒருவர் பின்லேடனின் நைரோபி மையத்தை வழிநடத்திவிட்டு டல்லாஸ் நகரில் எஃப்பிஐ கண்காணிப்பில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சாக்ரமெண்டோ மற்றும் டாம்பா ஆகிய நகரங்களில் ராணுவப் பயிற்சி மற்றும் வெடிபொருள் அனுபவம் கொண்ட பின்லேடனின் கூட்டாளிகள் தங்கியிருந்ததையும் சிஐஏ அப்போதே கண்டறிந்து எச்சரித்திருந்தது.
நிதியுதவி
அறக்கட்டளைகள் பெயரில் நடந்த பயங்கரவாத நிதியுதவி
ஒசாமா பின்லேடன் தனது அமைப்பிற்கு நிதியுதவி திரட்டவும், சதித்திட்டங்களை செயல்படுத்தவும் அமெரிக்காவில் இயங்கி வந்த சில இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டதாக சிஐஏ உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மிச்சிகன் மற்றும் கலிபோர்னியாவில் இயங்கிய மர்சி இன்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நியூயார்க் மற்றும் பாஸ்டனில் இயங்கிய மையங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டதும், இதில் நியூயார்க் மையம் 1993 ஆம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின் மீதான வெடிகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையது என்பதும் உளவு அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.