விண்வெளிக்குச் செல்லும் சீனா ராணுவத்தை சாராத முதல் சீனர்.. எப்போது?
சீனாவைச் சேர்ந்த பொதுமக்களுள் ஒருவர் முதன் முறையாக விண்வெளிக்குச் செல்லவிருக்கிறார். விண்வெளியின் குறைந்த உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சீனாவின் டியன்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று நபர்கள் கொண்ட குழு நாளை விண்ணில் ஏவப்படவிருக்கின்றது. இதுவரை சீனாவைச் சேர்ந்த பல விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று திரும்பியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவருமே சீன ராணுவமான People's Liberation Army-யை சேர்ந்த விண்வெளி வீரர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சீனாவைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் இதுவரை விண்வெளிக்கு சென்றதில்லை. இப்போது தான் பொதுமக்களுள் ஒருவர் சீனாவின் சார்பில் விண்ணுக்கு செல்லவிருக்கிறார்.
யார்? எப்போது?
சீனாவிலுள்ள ஏரோநாட்டிகஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பீஜிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் கை ஹைச்சௌ என்பவர் தான் சீன ராணுவத்தை சேராத ஒருவராக விண்வெளிக்கு செல்லவிருக்கிறார். இதனை அந்நாட்டின் Manned Space Agency-யின் செய்தித் தொடர்பாளரான லின் ஷியாங்கும் உறுதி செய்திருக்கிறார். கை ஹைச்சௌ தான் அந்நாட்டின் விண்வெளி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கருவிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்துக் கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நேரப்படி நாளை (30.5.23) காலை 9.31 மணிக்கும், இந்திய நேரப்படி காலை 7.01 மணிக்கும் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது சீன விண்வெளி வீரர்கள் அடங்கிய ராக்கெட்.