இந்தியாவுக்கு எதிராக கல்வான் மோதலை நடத்திய தளபதி திடீரென பதவி நீக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
கடந்த 2017ல் டோக்லாம் மற்றும் 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகளுக்கு எதிராக சீன ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் அமைப்பின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜாவோ ஜோங்கி, சீன அரசின் உயரிய அரசியல் ஆலோசனைக் குழுவான CPPCC அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தில் மேற்கொண்டு வரும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ பதவி நீக்கங்களின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அறிக்கை
இந்தியாவிற்குப் பாடம் புகட்ட உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த வன்முறை மோதலுக்கு ஜாவோ ஜோங்கியே முதன்மை காரணமாக செயல்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்தன.
"இந்தியாவிற்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்ற நோக்கில் எல்லை மோதலுக்கான உத்தரவை அவரே பிறப்பித்தார் எனக் குறிப்பிடப்பட்டது.
தற்போதைய நடவடிக்கையின் மூலம் அவரது CPPCC உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, அனைத்து முக்கியப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடரும் பதவி நீக்கம்
சீன ராணுவத்தில் தொடரும் அதிரடிப் பதவி நீக்கப் படலம்
சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையை பலப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ராணுவ சுத்திகரிப்பு நடவடிக்கையில், இதுவரை சுமார் 101 மூத்த ராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை இழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
ஜாவோ ஜோங்கி மீது அதிகாரப்பூர்வமாக எவ்வித ஊழல் விசாரணையும் அறிவிக்கப்படாத போதிலும், தீவிர ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களான சின்ஹுவா மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லை மோதல்
எல்லை மோதல்களின் பின்னணியும் தற்போதைய அரசியல் மாற்றமும்
திபெத் மற்றும் சின்ஜியாங் எல்லைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய ராணுவ அமைப்பான வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் தலைவராக ஜாவோ ஜோங்கி பணியாற்றிய போதே டோக்லாம் மற்றும் லடாக் எல்லைகளில் பதற்றம் உச்சத்தை எட்டியது.
2020 டிசம்பரில் பணி ஓய்வு பெற்ற பிறகும் அரசில் செல்வாக்குடன் திகழ்ந்த அவர், தற்போது அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியா சீனா 8 அம்ச உடன்படிக்கை எட்டியது மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ஜி ஜின்பிங் இந்தியா வருவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மத்தியில் நடந்துள்ள இந்த நடவடிக்கை சர்வதேச புவி அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.