போர் விமானங்களை தைவான் நோக்கி பறக்கவிடும் சீனா!
தைவான் நாட்டிற்குள் 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களை சீனா அத்துமீறி அனுப்பி இருப்பதாகத் தைவான் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவும் தைவானும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்திருந்தாலும், நாட்டுக்குள் நடந்த அரசியல் பிரச்சனைகளாலும் மாற்றங்களாலும் இவை இரு நாடுகளாக பிரிந்தது. இப்படி தனி நாடாக பிரித்திருந்தாலும், இதை சீனா இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தைவான், சீனாவுடன் சேர்ந்த மற்றும் சீனாவுக்கு சொந்தமான ஒரு இடம் என்கிறது சீன நாடு. இந்த பிரச்சனை கடந்த சில தசாப்தங்களாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதற்கு இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.
"எங்கள் நாடு சுதந்திரமான ஒரு தேசம்"
இந்நிலையில், 70க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் வந்திருப்பதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது. "எங்கள் நாடு சுதந்திரமான ஒரு தேசம்" என்று சீன நாட்டை எதிர்த்து வருகிறது தைவான். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சீனா தன் படைபலத்தைக் காட்டி தைவானை அச்சுறுத்தி வருகிறது. இந்த வரிசையில், நேற்று மட்டும் சீனா கிட்டத்தட்ட 70 போர் விமானங்களை தைவான் எல்லைக்கு அருகில் பறக்கவிட்டிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதில் 40 விமானங்கள் ஏற்கனவே எல்லைக் கோட்டை கடந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தைவான் எல்லை அருகே 7 கடற்படைக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த அத்துமீறலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.