10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக சீனாவில் கடும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன், இதைக் கண்டித்து சீனர்கள் பலர் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சீன அரசு ஊரடங்கைத் தளர்த்தியது. இதனால், கொரோனா இன்னும் வேகமாகப் பரவும் நிலை அங்கு நிலவிவருகிறது. கொரோனவால் ஒரு நாளில் 30-40 பேர் மட்டுமே சீனாவில் உயிரிழந்து கொண்டிருந்தனர். ஆனால், அது இப்போது 300ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், IHME என்ற அமெரிக்க சுகாதார ஆய்வு நிறுவனம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்.
ஆய்வறிக்கையில் கூறப்படும் தகவல்கள்:
சீனாவில் கொரோனா எண்ணிக்கை அப்படியே உயர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி உச்சத்தைத் தொடும். அந்த சமயத்தில் சீன மக்களில் மூன்றில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர். இதேபோல், ஹாங்காங்கை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனமும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, சீன அரசு சீக்கிரமே நாடு முழுவதும் தடுப்பூசியை அமல் படுத்தவில்லை என்றால், 9,64,400 உயிரிழப்புகள் அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் உயிரிழப்புகள் கைமீறி போய் கொண்டிருப்பதால், மயானங்களில் நிறைய கூட்டம் அலை மோதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை சீன அரசு அதிகாரபூர்வமாக எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.