6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல நாளிதழில் வெளியான செய்தி படி, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், சுமார் 50 தோட்டாக்களால் துளைக்கப்பட்டதாகவும், இந்த கொலை வழக்கில் 6 நபர்கள், 2 பைக்குகளில் வந்ததாகவும், இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV -யில் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசால், காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார், பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாவார். கனடாவில் இந்தியர்களுக்கும், இந்தியா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து இந்தியா அரசாங்கம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கனேடிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்த சூழலில், நிஜார் கொலை செய்யப்பட்டான்.
வெளியான CCTV ஆதாரம்
இந்த கொலைக்கு பின்னால் இந்தியா அரசின் ஏஜெண்டுகள் இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தி குறிப்பில், நிஜார், குருத்வாரா வாசலில் சுட்டு கொல்லப்பட்டதாகவும், அந்த சீக்கிய கோவிலில் இருந்த CCTV கேமராவில் இந்த கொலை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை காட்சிகளை பார்க்கும் போது இது ஒருங்கிணைக்கப்பட்ட செயல் போலவே தோற்றமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜார்-ஐ கொலை செய்ய, 2 நபர்கள் ஈடுபட்டதாகவும், அவர்கள் துப்பாக்கியால் 50 குண்டுகளை சுட்டதாகவும், அதில் 34 குண்டுகள், நிஜாரின் உடலில் பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஜ்ஜாரை பின்தொடர்ந்த கொலையாளிகள்
'90 செகண்டுகள் நீளம் கொண்ட இந்த CCTV வீடியோவில், நிஜார், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அவரது வண்டியை (டிரக்) எடுக்கும்போது, அவர் கூடவே, அருகே நிறுத்தப்பட்டியிருந்த ஒரு வெள்ளை நிற செடான் கார்-உம் புறப்படுகிறது'. 'இந்த இரண்டு வண்டிகளும், வேகமாக வெளியேறும் பாதை நோக்கி நகர்கிறது. எக்ஸிட் கேட் அருகே செல்லும் முன்னர், நிஜ்ஜாரின் வாகனத்தை, அந்த கார் இடைமறிக்கிறது. அப்போது, மறைவில் காத்திருந்த இரண்டு மர்ம நபர்கள், நிஜ்ஜாரின் வாகனத்தை நோக்கி நடக்கின்றனர்'. 'அவர்கள்,நிஜ்ஜாரின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டுகின்றனர். அதே நேரம், அந்த வெள்ளை கார் நகர்ந்து விடுகிறது. சில மணித்துளிகளில், இந்த கொலையாளிககளும் அந்த கார் சென்ற திசை நோக்கி ஓடுகின்றனர்' என வாஷிங்டன் போஸ்ட் கொலைக்காட்சிகளை விளக்கமாக விவரிக்கிறது.
நேரில் பார்த்த சாட்சியம்
இந்த கொலையை நேரில் சிலர் பார்த்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருத்வாரா அருகே வியாபாரம் செய்யும் நபர்களிடமும், வசிக்கும் நபர்களிடத்திலும் கேட்ட போது, இதுவரை எந்த விசாரணை அதிகாரியும் தங்களிடம் நேரில் விசாரிக்கவில்லை எனவும், தங்களிடம் CCTV பதிவு பற்றி கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்கள். மேலும், குருத்வாரா வாசிகள், விசாரணை அதிகாரிகள், 50 புல்லெடுகள் அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தின் போது அருகே விளையாடி கொண்டிருந்த ஒரு நபர், சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளாராம். அப்போது சுற்றிலும் சிதறிய கண்ணாடி துண்டுகளும், புல்லெடுகளும் கிடந்ததாக அவர் கூறியுள்ளார்.