3 பெண்களுடன் தொடர்பு, பிளாக்மெயில் செய்ய முயன்ற ஜெப்ரி எப்ஸ்டீன்: பில் கேட்ஸ் வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் மூடிய கதவுகளுக்கு பின் நடைபெற்ற ரகசிய விசாரணையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ள அவர், அந்த ரகசியங்களை வைத்து மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னை மிரட்ட முயன்றதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மரணமடைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனின் சட்டவிரோத நெட்வொர்க் மற்றும் தொடர்புகள் குறித்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக்குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் நீதித்துறை வெளியிட்ட கூடுதல் ஆவணங்களின் அடிப்படையில், ஜூன் 10 அன்று பில் கேட்ஸ் தானாக முன்வந்து குழுவின் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதன் அதிகாரப்பூர்வ நகல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சதித் திட்டம்
மூன்று பெண்களுடன் தொடர்பு: எப்ஸ்டீனின் சதித் திட்டம்
விசாரணையின் போது, தனக்கு ரஷ்யாவை சேர்ந்த பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா, அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா மற்றும் மருத்துவ தொழிலதிபர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசெல்ரோட் ஆகிய மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தத் தொடர்புகள் எப்ஸ்டீனுடனான எனது சந்திப்புகளுக்குச் சம்பந்தமில்லாதவை, ஆனால் இவை என் குடும்பத்திற்குப் பெரும் வேதனையை அளித்தன. எனது இந்தத் தனிப்பட்ட பலவீனங்களையும், அதனுடன் பல பொய்களையும் கலந்து, என்னை மீண்டும் அவரோடு இணைந்து செயல்பட வைக்க எப்ஸ்டீன் அழுத்தக் காரணியாகப் பயன்படுத்த முயன்றார்" என்று தெரிவித்தார்.
ஆதாரங்கள்
பிளாக்மெயில் மற்றும் மின்அஞ்சல் ஆதாரங்கள்
2013-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் எழுதிய ஒரு மின்னஞ்சல் வரைவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. அதில் பில் கேட்ஸ் மற்றும் இருவருக்கும் பொதுவான ஊழியரான போரிஸ் நிகோலிக் ஆகியோரின் தனிப்பட்ட விபரங்களைக் குறிப்பிட்டு மிரட்டும் தொனி இருந்தது. "எப்ஸ்டீன் என்னை நேரடியாக மிரட்டவில்லை. ஆனால் இந்த மின்னஞ்சல்களைப் பார்க்கும்போது, உண்மைகளையும் பொய்களையும் கலந்து ஏதோ ஒரு நோக்கத்திற்காக என்னை பிளாக்மெயில் செய்ய அவர் திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார். ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பாலியல் தொற்று நோய் (STD) குறித்த கேள்விக்கு, "எனக்கு ஒருபோதும் பாலியல் நோய் இருந்ததில்லை. யாருக்கும் நான் ரகசியமாக மருந்துகளை வழங்கியதும் இல்லை" என்று பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
விளக்கம்
14 முறை சந்திப்பு: கேட்ஸ் பவுண்டேஷன் விளக்கம்
2008-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பிறகும், பில் கேட்ஸ் அவருடன் தொடர்பில் இருந்ததாக நீதித்துறை ஆவணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து விளக்கமளித்த பில் கேட்ஸ், "நான் எப்ஸ்டீனை 4 ஆண்டுகளில் சுமார் 12 முதல் 14 முறை நேரில் சந்தித்துள்ளேன். தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய பணக்காரர்களின் நிதியுதவியை பெற்றுத் தருவதாக அவர் கூறியதால் மட்டுமே அவரை சந்தித்தேன், அது ஒரு பெரிய தவறு" என்று ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் கேட்ஸ் தொண்டு நிறுவனத்திலும் எதிரொலித்துள்ளதால், எப்ஸ்டீனுடன் பவுண்டேஷன் ஊழியர்கள் மேற்கொண்ட முந்தைய தொடர்புகள் குறித்து ஒரு வெளிப்புற தணிக்கை மற்றும் மறுஆய்வை நிர்வாகம் தொடங்கியுள்ளது. பில் கேட்ஸ் தனது செயல்களுக்கு ஏற்கனவே ஊழியர்கள் கூட்டத்தில் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.