Page Loader
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 

எழுதியவர் Sindhuja SM
Apr 18, 2024
02:10 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய தனது மாமா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் நியூ கினியாவில் அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், நியூ கினியாவில் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழ்ந்த பகுதியில் தனது மாமாவின் உடல் விழுந்ததாகவும், அவரது உடலை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 81 வயதான அதிபர் பைடன் தனது சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டனின் போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்டதற்கு பின் இதனைத் தெரிவித்தார். அவர் தனது மாமாவுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனது மாமாவின் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் தனது கையை வைத்து வருத்தப்பட்டார்.

அமெரிக்கா 

"அவரது உடலை ஒருபோதும் மீட்கவில்லை": ஜோ பைடன் 

அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் கீழே விழுந்த பிறகு அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. "நியூ கினியா மீது ஒற்றை எஞ்சின் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை பறக்கவிட்ட விமானியாக அவர் இருந்தார். யாருமே அதை செய்ய முன்வராததால் அவர் தன்னார்வமாக முன்வந்தார். அந்த நேரத்தில் நியூ கினியாவில் நிறைய நரமாமிசம் உண்பவர்கள் இருந்த பகுதியில் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்" என்று பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். "அவர்கள் அவரது உடலை ஒருபோதும் மீட்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.