LOADING...
வங்கதேசத்தில் இன்று 'மெகா' தேர்தல்! 30 ஆண்டுகளில் முதல்முறையாக 'பேகம்கள்' இல்லாத களம்
பங்களாதேஷ், இன்று பொதுத்தேர்தலை சந்திக்கிறது

வங்கதேசத்தில் இன்று 'மெகா' தேர்தல்! 30 ஆண்டுகளில் முதல்முறையாக 'பேகம்கள்' இல்லாத களம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
08:34 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியின் கீழ் இருந்த பங்களாதேஷ், இன்று (பிப்ரவரி 12, 2026) தனது அடுத்த அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலை சந்திக்கிறது. ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், ஆசிய பிராந்தியமே இதனை உற்று நோக்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக ஷேக் ஹசீனா (அவாமி லீக்) மற்றும் காலேதா ஜியா (BNP) ஆகிய இருவருமே களத்தில் இல்லை. ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார், காலேதா ஜியா கடந்த டிசம்பரில் காலமானார். வங்கதேசத்துடன் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவுக்கு, அங்கு அமையும் அரசு மிகவும் முக்கியமானது.

வேட்பாளர்கள்

தேர்தல் களம் - முக்கிய அம்சங்கள்

முக்கிய வேட்பாளர்கள்: லண்டனில் 17 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்த தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தற்போது BNP கட்சியின் தலைவராக பிரதமர் ரேஸில் முன்னணியில் உள்ளார். அவருக்கு போட்டியாக தாரிக் ரஹ்மானின் முன்னாள் கூட்டாளியான ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) களம் காண்கிறது. அவாமி லீக் தடை: இந்தியாவின் நீண்டகால நண்பரான ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சிக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் எப்போது?

மொத்தமுள்ள 300 நேரடி தொகுதிகளுக்கு இன்று காலை 7:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெரும்பான்மை பெற ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 151 இடங்கள் தேவை. தேர்தல் முடிவுகள் நாளை, பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை) காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 'ஜூலை சாசனம்' எனப்படும் அரசியலமைப்பு மாற்றத்திற்கான பொது வாக்கெடுப்பும் இன்று நடைபெறுகிறது.

Advertisement