
குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து
செய்தி முன்னோட்டம்
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ரஹ்மான், இந்த வார தொடக்கத்தில் ஒரு பேஸ்புக் பதிவில் இந்த ஆத்திரமூட்டும் ஆலோசனையை வெளியிட்டார்.
இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களைக் கைப்பற்ற சீனாவுடன் கூட்டு ராணுவ ஏற்பாட்டை அவர் ஆதரித்தார்.
இந்தியா பாகிஸ்தானுடன் ராணுவ ரீதியாக மோதினால், இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முகமது யூனுஸ்
ஜகா வாங்கிய முகமது யூனுஸ் அரசாங்கம்
முகமது யூனுஸின் கூட்டாளி வெளியிட்ட இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம், ரஹ்மானின் கருத்துக்களிலிருந்து விரைவாக விலகிக் கொண்டது.
வெள்ளிக்கிழமை (மே 2) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம், இந்தக் கருத்துக்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு கிடையாது என்று தெளிவுபடுத்தியது.
இறையாண்மை, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான பங்களாதேஷின் உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
2009 ஆம் ஆண்டு பங்களாதேஷ் ரைபிள்ஸ் கலகத்தை விசாரிக்கும் ஒரு ஆணையத்தின் தலைவராக யூனுஸ் நிர்வாகத்தால் டிசம்பர் 2024 இல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே பதட்டமான இந்தியா-பங்களாதேஷ் உறவுகளுக்கு மத்தியில் அவரது சமீபத்திய கருத்துக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.