தனி குடியரசு நாடாக பாகிஸ்தானில் இருந்து சுதந்திரத்தை அறிவித்த பலுசிஸ்தான்! ஒரு புதிய நாடு உருவாக என்னென்ன தகுதிகள் தேவை?
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், "பலுசிஸ்தான் குடியரசு" என்ற பெயரில் தங்களை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியாகி வரும் ஒரு கடிதம் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்த மாகாணத்தின் 85 சதவீத பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகக் கூறினாலும், இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் அந்தப் பகுதி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழேயே நீடிக்கிறது. இருப்பினும், இந்த சம்பவத்தால் ஒரு பிராந்தியம் தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டால், அதற்கு சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க என்னென்ன நடைமுறைகள் தேவை என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது.
அடிப்படைத் தகுதிகள்
ஒரு புதிய நாடு உருவாவதற்கான 4 அடிப்படைத் தகுதிகள்
சர்வதேச சட்டங்களின்படி ஒரு புதிய நாடு உருவாவதற்கான மிக முக்கியமான கட்டமைப்பு 1933 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மான்டிவீடியோ மாநாடு விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
நிலையான மக்கள் தொகை: அந்தப் பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளங்களுடன் வாழும் நிலையான மக்கள் குழு இருக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட எல்லை: அந்த நாடு தனக்கெனத் துல்லியமாக அடையாளம் காணப்பட்ட எல்லையையும், நிலப்பரப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
செயல்பாட்டு அரசு: சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுச் சேவைகளை வழங்கவும், நிறுவனங்களை இயக்கவும் கூடிய ஒரு வலுவான அரசாங்கம் அங்குச் செயல்பட வேண்டும்.
சர்வதேச உறவுகளைக் கையாளும் திறன்: பிற நாடுகளுடன் சுயாதீனமாக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும், தூதரக உறவுகளை வளர்க்கவும் அதற்குத் தகுதி இருக்க வேண்டும்.
ஐநா சபை அங்கீகாரம்
ஐநா சபையின் அங்கீகாரமே இறுதி முத்திரை
ஒரு பிராந்தியம் மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருந்தாலும், அதற்கு உலக நாடுகள் வழங்கும் ராஜதந்திர அங்கீகாரமே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்: முதலில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளில் குறைந்தது 9 நாடுகளின் ஆதரவு வாக்குகள் தேவை. அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது.
பொதுச்சபை வாக்கெடுப்பு: பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்த பிறகு, ஐநாவின் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மையுடன் வாக்குகள் பெற்றால் மட்டுமே புதிய நாடு அங்கீகரிக்கப்படும்.
சிக்கல்கள்
பலுசிஸ்தான் தனி நாடாக மாறுவதில் இருக்கும் சிக்கல்கள்
பலுசிஸ்தான் விவகாரத்தில் சட்ட விதிகளையும் தாண்டி பல அரசியல் மற்றும் ராஜதந்திர சிக்கல்கள் நிறைந்துள்ளன.
பலுசிஸ்தானைத் தனது ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதும் பாகிஸ்தான், இத்தகைய பிரிவினைவாத நகர்வுகளைத் தனது ராணுவ பலம் கொண்டு கடுமையாக எதிர்த்து வருகிறது.
மேலும், வரலாற்று ரீதியான பலுசிஸ்தான் பிராந்தியம் பாகிஸ்தான் மட்டுமின்றி ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளிலும் பரவியுள்ளதால், அண்டை நாடுகளும் இதற்கு ஆதரவு தராது.
எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மற்றும் குவாடர் துறைமுகத் திட்டங்கள் மூலம் பலுசிஸ்தான் பகுதியில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, தனது மூலோபாய நலன்களுக்காக பாதுகாப்பு கவுன்சிலில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடவே அதிக வாய்ப்புள்ளது.
சூடான் மற்றும் தைவான்
சூடான் மற்றும் தைவான் நாடுகள் உணர்த்தும் பாடம்
உலக வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு சூடானிடமிருந்து பிரிந்த தெற்கு சூடான், முறையான அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் உலக நாடுகளின் பலமான ஆதரவுடன் மிக விரைவாக ஐநா சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது.
ஆனால், மறுபுறம் தைவான் நாடு தனக்கென சொந்த ராணுவம், அரசாங்கம் மற்றும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், சீனாவின் புவிசார் அரசியல் அழுத்தம் காரணமாக பல நாடுகளால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரிக்கப்படாமல் தூதரக ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பலுசிஸ்தான் தங்களை தனி நாடாகப் பிரகடனப்படுத்தினாலும், உலக வல்லரசு நாடுகளின் ஆதரவும், பாகிஸ்தானின் சம்மதமும் இல்லாமல் அது சர்வதேச அரங்கில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாறுவது மிகக் கடினமான ஒன்றாகும்.