LOADING...
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா

நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
05:25 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் ராப் கலைஞரும், ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் தலைவருமான பாலேந்திர ஷா (35), நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமராக இன்று (மார்ச் 27) பதவியேற்றார். நேபாளத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஊழலற்ற ஆட்சி மற்றும் தலைமுறை மாற்றத்தை வேண்டி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக பாலேந்திர ஷாவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை அவரது சொந்த கோட்டையான ஜாபா-5 தொகுதியில் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது நேபாள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பதவியேற்பு

பதவியேற்பு விழா

நேபாளத்தின் ஜனாதிபதி மாளிகையான சீத்தல் நிவாஸில் நடைபெற்ற விழாவில் பாலேந்திர ஷா பிரதமராகப் பதவியேற்றார். அவருக்கு முன்னதாக, அவையின் மூத்த உறுப்பினர் அர்ஜுன் நரசிங்க கேசி புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாலேந்திர ஷா தலைமையில் 15 முதல் 18 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. பாலன் ஷாவின் பதவியேற்பிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் "நேபாள பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை இந்தப் பதவி பிரதிபலிக்கிறது. இந்தியா-நேபாளம் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.

Advertisement