அந்நிய முதலீட்டுக் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தும் ஆஸ்திரேலிய அரசு
ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி மற்றும் குடியிருப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் மீதான கட்டணத்தை மூன்று மடங்கு வரை அதிரகரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு. மேலும், ஆஸ்திரேலியாவில் குடியிருப்பகளை காலியாக விட்டுச் செல்லும் அந்நிய நாட்டவர்கள் மீது அபராதம் விதிக்கவும் திட்டமிட்டு வருகிறது அந்நாட்டு அரசு. குடியிருப்பு வசதிகளில் முதலீடு செய்யும் அந்நிய நாட்டவர்கள், அதனைப் பயன்படுத்தாமல், அதே சமயம் வாடகைக்கும் விடாமல் இருப்பது, ஆஸ்திரேலியாவில் சில பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகளின் கட்டணம் 7.6% வரை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பாகும். எனவே, இந்தப் பிரச்சினையைக் களையவே மேற்கூறிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிடுகிறது ஆஸ்திரேலிய அரசு.
ஆஸ்திரேலிய அரசின் திட்டம் என்ன?
ஆஸ்திரேலிாவின் குடியிருப்பு வசதிகள் முதலீடு செய்திருக்கும் அந்நிய நாட்டவர்கள், தங்களது குடியிருப்புகளை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் காலியாக வைத்திருந்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேற்கூறிய வகையில் முதலீட்டுக் கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தொகையை, ஆஸ்திரேலியாவின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு. இது குறித்து ஆஸ்திரேலியாவின் பொருளாலர் ஜிம் சால்மர்ஸ் பேசும் போதும், அந்நிய நாட்டு முதலீடுகள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகள் ஆகியவை ஒரே பாதையில் பயணிப்பதை உறுதிசெய்யவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.