பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார். மேலும் இது ஆஸ்திரேலியாவின் வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்க உதவும் என்றும் அவர் கூறினார். "பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தை நிறுவ இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதுமையான சுற்றுச்சூழல் அமைப்புடன் ஆஸ்திரேலிய வணிகங்களை இணைக்க உதவும். மேலும், பிரிஸ்பேனில் இந்தியா அமைக்க இருக்கும் புதிய துணைத் தூதரகத்திற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்." என்று பிரதமர் அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகத்தை அமைக்க இருப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.
ஒரு வருடத்திற்குள் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை: பிரதமர் அல்பானீஸ்
"பெங்களூரில் அமைக்கப்பட இருக்கும் தூதரகம், இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது இராஜதந்திர பிணைப்பாக இருக்கும். இங்கு வந்து இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது இந்தியா திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். " என்று அவர் மேலும் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் பிரதமர் மோடியை சந்திப்பது இது ஆறாவது முறை என்றும் அவர் கூறினார். மேலும், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சிமாநாடு குறித்தும் அவர் பேசினார்.