ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ டேட், அவரது சகோதரர் ட்ரிஸ்டன் டேட், மற்றும் இரண்டு ரோமானிய பெண்கள் ஆகியோர் ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் ஒரு பெரும் புள்ளி ஆவார். €10 கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்திருக்கும் இவர், பெண் வெறுப்பு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு பெயர் போனவர். இப்படிப்பட்ட இன்டர்நெட் ஜாம்பவானை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். ஆண்ட்ரூ டேட்டால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட 6 பெண்கள் மூலம் அவர் செய்த காரியங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. அந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர் ஆபாச படங்கள் எடுத்ததாகவும் அவர்களைப் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரூ எங்கிருக்கிறார் என்பதை 9 மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை
அவரும் அவரது சகோதரரும் ஆள் கடத்தல், பலாத்காரம், போன்ற குற்றங்களை செய்ய ஒரு தனி கூட்டத்தையே வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது எல்லாம் தெரிந்தும் போலீஸாரால் ஆண்ட்ரூ எங்கிருக்கிறார் என்பதை 9 மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் தான் அவரை ரோமானிய போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு அப்போது ஏற்பட்டது. இதனையடுத்து, ஆறு மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸார், இன்று ஆண்ட்ரூ டேட் மீது மனித கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.