எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் சிலையின் உருவாக்கத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
எகிப்தில் அமைந்திருக்கும் ஸ்பிங்ஸ் சிலை (Sphinx Statue) எப்படி உருவாகியிருக்கலாம் எனத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். எகிப்தில் பிரமிடுகளுடன் சேர்த்து, விலங்கு போன்ற உடல் மற்றும் மனித முகத்தைக் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் மாபெரும் சிலையும் பிரபலம். இந்த சிலையானது 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இவை எப்படி உருவாகியிருக்கும் எனத் தாங்கள் கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த சிலையின் உருவாக்கத்தில் இயற்கைக்கு பெரும் பங்குண்டு என வாதிடுகிறார்கள் அவர்கள். ஆம், இயற்கை தான் இந்த சிலைகளை வடிவமைத்திருக்கலாம் எனவும், மனிதர்கள் அதற்கான நுணுக்கத்தை அளித்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எப்படி உருவாகியது ஸ்பிங்ஸ் சிலை?
காற்று அரிப்பின் மூலம் உருவாகும் பாறை வடிவங்களை யார்டாங் என்று அழைப்பார்கள். பாலைவனப் பகுதிகளில் இந்த யார்டாங்குகளை அதிகம் பார்க்க முடியும். அதாவது குறிப்பிட்ட திசையிலேயே காற்று வீசிக் கொண்டே இருக்கும் போது, அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாறையினை தன் போக்கிலேயே அரித்துச் செல்லும். அந்த வகையில் பாறைகள் காற்றால் அரிபடும் போது, காற்று வீசும் திசை மற்றும் தன்மைக்கு ஏற்ப அந்தப் பாறையின் வடிவம் மாறும். இந்த ஸ்பிங்ஸ் சிலையானது அப்படியான காற்றரிப்பினாலேயே உருவாகியிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்திய-அமெரிக்க புவியியலாளரான பரூக் எல்-பாஸ் என்பவர் ஸ்பிங்ஸின் தோற்றம் குறித்து இதே கோட்பாட்டை 1981ம் ஆண்டு முன்வைத்தார். அந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த ஆராய்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
எப்படி ஸ்பிங்ஸின் உருவாக்கம் இப்படித்தான் இருக்கும் என முடிவு செய்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்?
மேற்கூறிய வகையில் ஸ்பிங்ஸ் உருவாகியிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த ஒரு செயல்முறையையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். பாலைவனங்களில் காணப்படும் பாறையை போல மென் களிமண்ணை எடுத்துக் கொண்டு, காற்று அரிப்பில் ஈடுபடும் காற்றுக்கு வேகமாக வரக்கூடிய தண்ணீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த களிமண் பாறையை வேகமாக வரக்கூடிய தண்ணீரின் பாதையில் வைத்து சோதனை செய்திருக்கின்றனர். இறுதியில், அந்த களிமண் பாறையானது தொடர்ச்சியான தண்ணீர் அரிப்பால் ஸ்பிங்ஸை ஒத்த தோற்றத்திற்கு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே, ஸ்பிங்ஸின் உருவாக்கத்தில் காற்றும் பெருங்பங்காற்றியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். காற்றால் அரிபட்ட பாறையமைப்பில் மனிதர்கள் தங்களுடைய கைவண்ணத்தைக் காட்டியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.