வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா
ரஷ்ய பாராளுமன்றம் தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. யெவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் கூலிப்படையினர் கடந்த சனிக்கிழமை ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக படையெடுத்ததை அடுத்து நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக மக்களுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த கிளர்ச்சி நசுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், வாக்னர் படையினர் ரஷ்யாவின் முதுகில் குத்திவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், தனது படையினருக்கு எதிராக ரஷ்ய இராணுவம் செயல்படுவதாக குற்றம் சாட்டிய பிரிகோஜின், ரஷ்ய தலை நகரம் மாஸ்கோவை நோக்கி படையெடுத்தார். இந்நிலையில், ரஷ்ய அரசாங்கம் பிரிகோஜினுடன் அவசரமாக ஒரு ஒப்பந்தத்தை போட்டது. இதனையடுத்து, திடீரென அந்த கிளர்ச்சி நிறுத்தப்பட்டது.
புதினின் 20 ஆண்டுகால ஆட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜினுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும் என்றும், அவரது துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்படாது என்றும் ரஷ்யா உறுதியளித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் 20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது இந்த வாக்னர் கிளர்ச்சி தான் என்று கூறப்படுகிறது. வாக்னர் என்பது ஒரு தனியார் கூலிப்படையாகும். உக்ரைனில் உள்ள பக்முட்டை ரஷ்யா கைப்பற்றுவதற்கு பெரும் உதவியாக இருந்தது இதே வாக்னர் கூலிப்படைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை ரஷ்யாவின் டுமா(பாராளுமன்றத்தின் கீழ்சபை) உருவாக்கி வருவதாக ரஷ்ய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.