ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக காசா வாழ் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்குதல்களால் ஏற்படும் அழிவை விட, பசி மற்றும் நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது அப்பகுதி. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட ஐநா தீர்மானத்தை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த முடிவை சரியான முடிவெனத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான தங்களுடைய போரைத் தொடரும் தங்களுடைய முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தான் பொறுப்பு:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் இந்தப் போரில், 17,700 பாலத்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவித்திருக்கிறது காசா சுகாதார அமைச்சகம். மேலும், காசா பகுதியில் வாழ்ந்து வந்த 2.4 மில்லியம் பாலத்தீனியர்களில், 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே அந்த இடத்தைவிட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய, தற்போது செயல்பாட்டில் இல்லாத அல்-ஷிபா மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர். அமெரிக்கா வீட்டோ செய்ததையடுத்து, பாலஸ்தீனியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பாலஸ்தீன் தலைவர் மஹ்முத் அப்பாஸ்.